தைவானை சுற்றி தீவிர சீனா போர் பயிற்சி! படைகள் தயார் நிலையில் இருக்க ஜி ஜின்பிங் உத்தரவு
போருக்கு தயாராக இருக்குமாறு சீன படைகளுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
தயார் நிலையில் சீன படைகள்
சீன படைகள் போருக்கான தயார் நிலையில் பலப்படுத்துமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த வாரம் அழைப்பு விடுத்துள்ளார்.
தைவானை சுற்றிய பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான ராணுவ போர் பயிற்சி நடத்தப்பட்ட ஒரு சில நாட்களுக்கு பிறகு சீன ஜனாதிபதியின் இந்த அழைப்பு பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அரசு நடத்தும் CCTV ஒளிபரப்பாளர் தகவல் படி, ஜனாதிபதி ஜி ஜின்பிங் மக்கள் விடுதலை ராணுவ படையின் ராக்கெட் படைப்பிரிவுக்கு வியாழக்கிழமை சென்றிருந்த போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜி ஜின்பிங் அழைப்பு
அதில், ராணுவம் தங்களுடைய போர் பயிற்சி மற்றும் அதற்கான தயாரிப்புகளை முழுமையாக வலுப்படுத்த வேண்டும் மற்றும் வீரர்கள் உறுதியான போர் திறன்கள் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று சீனா அறிவித்து வருகிறது, ஆனால் தைவான் தன்னை சுயாதீன சுதந்திர நாடு என்று பிரகடனப்படுத்தி வரும் நிலையில், சீனா இந்த சுற்றி வளைப்பு போர் ஒத்திகை மற்றும் படைகளை தயார் நிலையில் வைத்திருத்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.