;
Athirady Tamil News

சுமந்திரன், சிறீதரன் இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சி

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) இடையே சமரசம் ஏற்படுவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேச்சுக்களின் ஆரம்பகட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை அடுத்தே, வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்பாளர் அறிமுக விழாவில் இருவரும் ஒரே நேரத்தில் பிரசன்னமாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

சிவஞானம் சிறீதரனுக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கட்சியின் தலைமைத்துவத்தை மையப்படுத்திய போட்டி காணப்பட்டது. கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டபோது இந்த நிலைமை மிகத் தீவிரமடைந்திருந்தது.

நீதிமன்ற இடைக்காலத் தடை

அதன் பின்னர் சிறீதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதனையடுத்து, சுமந்திரன் கட்சியின் செயலாளர் பதவியை கோரினார். இதனையடுத்து சர்ச்சைகள் ஆரம்பித்தன.

புதிய தெரிவுகளை பொதுச்சபை ஏற்றுக்கொள்வதில் குழப்பங்கள் நீடித்தன. தொடர்ந்து 17ஆவது தேசிய மாநாடு பிற்போடப்பட்டது. நீதிமன்ற இடைக்காலத் தடையால் அவரால் அப்பதவியில் நீடிக்க முடிந்திருக்கவில்லை.

இதனையடுத்து, இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்த நிலையில் இறுதியாக கட்சியின் வேட்பாளர்கள் தெரிவு வரையில் தொடர்ந்திருந்தன.

சமரசப்படுத்தும் முயற்சி
இவ்வாறான பின்னணியில் இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் கட்சியின் துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) ஈடுபட்டார்.

முதற்கட்டமாக, இருவரையும் வேட்பு மனுத்தாக்கலின் போதும், வேட்பாளர் அறிமுக நிகழ்வின் போதும் ஒரே சமயத்தில் பிரசன்னமாவது உள்ளிட்டவற்றில் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், இருவருக்கும் இடையில் முழுமையான சமரசத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.