;
Athirady Tamil News

காசா குடியிருப்புகளில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: ஐ.நா. கடும் கண்டனம்

0

காசாவின் (Gaza) பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு (Israel) ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் உள்ள பல்வேறு வீடுகள் மீது சனிக்கிழமை (19) இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

அதில், ஒரு அடுக்குமாடி கட்டடமும், பக்கத்தில் உள்ள 4 வீடுகளும் தரைமட்டமாகியதோடு 87 பேர் பலியாகி இருக்கலாம் அல்லது காணாமல் போய் இருக்கலாம் என்று பலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. கண்டனம்
40-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் பலர், இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாகவும் காசா பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளால் அப்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளதால், அவசர ஊர்தி வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெய்ட் லஹியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்

இது குறித்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமைதி செயல்முறைக்கான ஐ.நா ஒருங்கிணைப்பாளர் தோர் வென்னஸ்லேன்ட்,”பல வாரங்களாக தீவிரப்படுத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையால், ஏராளமான மக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் மட்டுமல்லாமல், வடக்குப் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அதில் 1,200 பேர் பலியானார்கள். 250 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 42 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.

ஹமாஸ் இயக்கத்தினரை ஆதரிக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில், காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேல் இராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அதையடுத்து, போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலை அமெரிக்கா வற்புறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.