தேம்ஸ் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித சடலம்! படகு கவிழ்ந்த விபத்தில் மீட்பு குழு நடவடிக்கை
பிரித்தானியாவின் தேம்ஸ் ஆற்றில் இருந்து மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மனித உடல் கண்டெடுப்பு
பிரித்தானியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 60 வயது நபரை தேடும் பணியில் தேம்ஸ் ஆற்றில் இருந்து மனித உடல் ஒன்று வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11ம் திகதி வெள்ளிக்கிழமை சர்ரே-வின் சன்பரி-ஆன்- தேம்ஸில் சன்பரி லாக் ஆற்றின் ஒரு பகுதியில் 6 பேர் தண்ணீரில் விழுந்த போது வெய்பிரிட்ஜ் ரோயிங் கிளப் உறுப்பினரான 60 வயது நபர் மட்டும் மீண்டும் கணக்கில் வரவில்லை.
இதையடுத்து தேடுதல் மற்றும் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது, இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தேம்ஸ் ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தை மீட்பு மற்றும் தேடுதல் குழுவினர் மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் மரணம் சந்தேகத்திற்குரிய வகையில் இல்லை என்றும், முறையான அடையாளம் சரிபார்ப்பு இன்னும் நடைபெறவில்லை.
இருப்பினும் காணாமல் போனவரின் குடும்பத்தினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.