மாற்றம் என கூறி தமிழ் தேசியத்தை அடமானம் வைக்க முடியாது
மாற்றம் என கூறி சிங்கள தேசியத்திடம் தமிழ் தேசியத்தை அடமானம் வைக்க முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும் தவச்செல்வம் சிற்பரன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் தெற்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் தமிழர் மத்தியிலும் உண்டு. அதாவது ஊழலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற அவா இருக்கின்றது. அதற்காக தமிழ் தேசியத்தை சிங்கள தேசியத்திற்கு அடமானம் வைக்க முடியாது. மக்களுக்குமாற்றம் தேவை பழையவர்கள் வேண்டாம் என நினைக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த தேர்தலில் போட்டியிடும் இளைய ஆளுமைமிக்க அணியான எமது அணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படும் மாற்றமானது “எமக்காக நாம்” என எம்மின இளையோரை நோக்கியதாகவே இருக்கும் என நம்புகிறேன்
அதேவேளை எமது கட்சி தலைவர் சி . வி விக்னேஸ்வரன் ஐயா மதுபான சாலைக்கான அனுமதி பத்திரம் ஒன்றிற்கு சிபாரிசு கடிதம் வழங்கியதை சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சிக்கின்றனர்.
ஆனால் பலர் மத்தியில் விக்னேஸ்வரன் ஐயா இப்படி செய்து விட்டாரே என்ற ஆதங்கமே உண்டு. அதே ஆதங்கம் தான் எமது கட்சியில் உள்ள பலரிடம் உள்ளது. அதனை தவிர்த்து இருக்கலாம் என்ற எண்ணமே பலரிடம் உண்டு.
விக்னேஸ்வரன் ஐயா கடந்த 11 வருடங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டுள்ளார். இதுவரையில் எந்த முறைகேடுகள் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் அல்ல. அது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சிபாரிசு கடிதம் கொடுத்து விட்ட விடயத்தை சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சிக்கின்றனர். ஆனால் பலருக்கு ஐயா இப்படி செய்து விட்டாரே என்ற ஆதங்கமே உண்டு.
நீதிபதிகள் சட்டத்திற்கு சரியா ? பிழையா ? என்பதனையே பார்ப்பார்கள். அவ்வாறே அவர்கள் பழக்கப்பட்டு விடுவார்கள். அப்படித்தான் நீதியரசரான விக்னேஸ்வரன் ஐயாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிபாரிசு கடிதங்கள் கொடுப்பது வழமையானது என்பதாலும் அது சட்டத்திற்கு முரணானது இல்லை என்பதாலும் அதனை வழங்கி விட்டார். ஆனாலும் அதனை தவிர்த்து இருக்கலாம் என மேலும் தெரிவித்தார்.