அரிசி விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
அரிசியின் விலை உயர்வுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு என்றும், நுகர்வோர் சேவை அதிகாரசபை தனது கடமைகளை புறக்கணித்துள்ளதாகவும் மினிபே அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தவிசாளர் நிசாந்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் (Kandy) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை அரசாங்கம் பாதுகாக்க தவறியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி மாபியா
தற்போதைய ஜனாதிபதி இது தொடர்பில் அவதானம் செலுத்தி சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டமொன்றை வகுக்க வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாமல் அரிசி மாபியாவை எதிர்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கடந்த அரசாங்கங்கள் இந்தப் பொறுப்பை முழுமையாக ஏற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அவதானம்
தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தாவிடின் எதிர்வரும் இரண்டு மாதங்களில் அரிசி பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும், எதிர்வரும் ஜனவரி மாதம் அறுவடையை வெட்டவுள்ளதால், இந்த இரண்டு மாதங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இல்லாவிடின் ஆபத்தான நிலைமை ஏற்படக் கூடும் எனவும் தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.