;
Athirady Tamil News

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் முன்மாதிரியான செயல்

0

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் வி தர்மலிங்கம் அவர்களின் நினைவிடத்தில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டியமைக்கு தமிழ் மக்கள் கூட்டணியினர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதுடன் , ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி , அவ்விடத்தை சுத்தம் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வி தர்மலிங்கம் அவர்களின் நினைவிடத்தில் கட்சிகள் சில தமது தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களால் சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இது தொடர்பில் கட்சியின் மேல் மட்டத்தினருக்கு தகவல் கிடைத்ததும் , நினைவிடத்திற்கு சென்று , சுவரொட்டிகளை அகற்றி , அவ்விடத்தையும் சுத்தம் செய்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும் வரதராஜன் பார்த்திபன் தனது மனவருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் கட்சியின் சார்பில் மன்னிப்பும் கோரியுள்ளார்.

சிங்கள பேரினவாத அரசுகள் எமது நினைவுச்சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கின்றனர். அத்துடன் அவர்கள் அதற்குரிய மரியாதைகளையும் வழங்கிவராத நிலையில் தமிழ்தேசியப் பரப்பில் செயற்படுகின்ற அனைத்துக் கட்சிகளும் இனமொழி மதம் சாராமல் அனைத்து நினைவுச்சின்னங்களுக்கும் அதற்குரிய கௌரவத்தினை தொடந்து வழங்கி வருகின்ற இந் நிலையில் கட்சிகளின் சில ஆதரவளர்களால் நிகழ்ந்தப்பட்ட இச் சம்பவம் மனவருத்தத்திற்குரியது.

தேர்தல் அரசியல் போட்டிகளுக்கு அப்பால் ஒரு பண்பாட்டு அரசியலினை இந்த மண்ணில் நிகழ்த்திக் காட்டவேண்டியது ஒவ்வொரு தமிழ்த்தேசிய கட்சிகளினதும் தலையான கடமையாகும். எனவே ஒவ்வொரு கட்சிகளின் ஆதரவாளர்களும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் சுவரொட்களை பொறுப்புணர்ந்து பகுத்தறிந்து ஒட்டவேண்டும்.
நடைபெற்ற குறித்த சம்பவத்திற்கு மன்னித்துகொள்ளுங்கள் என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி கடந்து செல்லமுடியாது. ஆனாலும் இவ் விடயம் தொடர்பில் பகீரங்க மன்னிப்பு கேட்கின்றோம்.

குறிப்பாக இச் சம்பவம் தொடர்பில் அமரர் தர்மலிங்கம் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கோருகின்றோம். இனிவரும் காலங்களில் இவ்வாறான விரும்பத்தகாத செயல்கள் இடம்பெறாத வகையில் நடந்து கொள்ளுமாறு எமது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.