அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய மன்னருக்கு எதிராக குரல் எழுப்பிய பெண்!
அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், தலைநகர் கன்பராவில் உள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (21-10-2024) உரையாற்றியுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது உரையினை நிறைவு செய்தபோது, அவுஸ்திரேலிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுயாதீன பெண் செனட் சபை உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பழங்குடி இன பெண் ‘’நீங்கள் எனக்கு மன்னர் அல்ல’’ என நாடாளுமன்றத்தில் சத்தமிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரத்த குரலில் சுமார் ஒரு நிமிடம்வரை சத்தமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவரை, நாடாளுமன்ற பாதுகாவலர்கள் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.
பழங்குடி மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடப்பதாகத் தெரிவித்ததுடன், இது உங்கள் நாடு அல்ல எனவும், நீங்கள் எங்களுக்கு மன்னரும் இல்லை எனவும் கூச்சலிட்டுள்ளார்.
இதன் பின்னர் அரச தம்பதியர்களை வரவேற்கக் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களைப் பிரித்தானிய மன்னர் மற்றும் மகாராணி ஆகியோர் சந்தித்து உரையாடியுள்ளனர்.
பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த நாடாக அவுஸ்திரேலியா திகழும் நிலையில், அதன் தலைவராகப் பிரித்தானிய மன்னரே பணியாற்றுகிறார்.
எனினும், அந்த பதவியில் இருந்து மன்னரை நீக்குவது தொடர்பில் அவுஸ்திரேலியாவில் சமீபக் காலத்தில் விவாதங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.