;
Athirady Tamil News

நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என நிரூபித்திக்காட்டியவர்கள்

0

தமிழ்களுக்கு தங்களின் கோர முகத்தினை மெல்ல காட்ட ஆரம்பித்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் பொது தேர்தல் முடிந்த பின், உண்மையான, அல்லது கடந்த காலங்களைப் போன்று தமிழர்களுக்கு எதிரான அவர்களின் கோர முகத்தினை காண்பிப்பார்கள் என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஊழலுக்கு எதிரானவர்கள் என்ற கோசத்துடன் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள அனுரகுமார திஸ்சாநாயக்கவின் அரசாங்கம் இதுவரை தாங்கள் வழங்கிய வாக்குறதிகளின்படி ராஜபக்சக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

அவர்களிடம் இருந்த அரச வாகனங்களை மட்டுமே அவர்களால் திருப்பப்பெற முடிந்துள்ளது. ஆட்சியில் அமர்ந்த பின்னும் இன்னமும் விசாரணைகள் செய்வோம் என்றுதான் கூறுகின்றனர்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அனுரகுமாரவின் கட்சியினரும் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றார்கள். தமிழர்களுடைய வாக்கின் மூலம் ஆதரவினை அனுர அரசாங்கம் கோரி நிற்கின்ற நிலையில் கூட, தமிழ் மக்களுக்கு எதிரான தங்களுடைய கோர முகத்தினை காண்பிக்கின்றார்கள்.

குறிப்பாக சர்வதேச விசாரணை வேண்டாம் என்கிறார்கள். தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்கின்றார்கள். அதிகாரங்களை பகிர மாட்டோம் என்கின்றார்கள். பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களுடைய வாக்கினை கோரும் இந்த நிலையிலேயே அனுர அரசு இவ்வாறு வெளிப்படையாக தமிழ் விரோத செயற்பாடுகளில், ஈடுபடுகின்றது என்றால், தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் தம்மிடத்தில் உள்ள அத்தனை கோர முகங்களையும் வெளிப்படுத்துவார்கள்.

நாட்டின் பொருளாதாரம் இந்த அளவிற்கு பின்னோக்கி செல்வதற்கு ஊழலும் ஒருகாரணம் என்பது உண்மை. ஊழல்வாதிகள் இந்த அரசியல் வரலாற்றில் இருந்தே அகற்றப்பட வேண்டியவர்கள்.

நாங்களும் ஊழலுக்கு எதிரானவர்கள்தான். நாங்கள் ஒரு குறுகிய காலம் யாழ்.மாநகர சபையினை ஆட்சி செய்த போது எடுத்த நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை கொண்டே நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள், அதற்கு துணைபோபவர்கள் இல்லை என்பதை மக்களுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளோம்.

அதே போன்று தமிழ் தேசியத்தில் இருந்து விலகிச் செல்லாதவர்கள் என்பதையும் நிரூபித்துக் காட்டியுள்ளோம்.

எனவேதான் சொல்லுகின்றோம் ஊழல் எதிர்ப்பு அல்லது மாற்றம் என்ற கோசங்களுடன் வரும் அனுரவின் கோசங்களில் தமிழ் மக்கள் சிக்கி தமிழ் தேசியத்தை தொலைத்துவிடக் கூடாது. இந்த தேர்தலில் தமிழ் தேசியத்துடன் நின்று ஊழலை எதிர்க்கும் இளைஞர்களான எங்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.