ஜேர்மன் உணவகம் ஒன்றில் பீட்சா வாங்க குவிந்த கூட்டம்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை
ஜேர்மன் உணவகம் ஒன்றில், ஒரு குறிப்பிட்ட பீட்சாவை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஆனால், அந்த பீட்சாவுடன் போதைப்பொருள் ஒன்று கொடுக்கப்படுகிறது என்ற உண்மை பின்னர் தெரியவந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் விரும்பிய பீட்சா
ஜேர்மனியின் Düsseldorf நகரிலுள்ள உணவகம் ஒன்றில், ’pizza No. 40’ என்னும் பீட்சா அதிக அளவில் மக்களால் விரும்பப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணையில், அந்த பீட்சாவுடன் சைட் டிஷ்ஷாக கொக்கைன் என்னும் போதைப்பொருளும் வழங்கப்பட்டதே மக்கள் அதன் மீது ஆர்வம் காட்டியதற்கு காரணம் என தெரியவந்தது.
பொலிசார் அந்த உணவகத்துக்குச் செல்ல, அந்த உணவகத்தின் உரிமையாளரான 36 வயது நபர் பொலிசாரைக் கண்டதும் ஒரு பை நிறைய போதைப்பொருளைத் தூக்கி ஜன்னல் வழியாக வீசியுள்ளார்.
பொலிசார் அந்த ஜன்னலுக்கு வெளியே தயாராக காத்திருக்க, அந்த போதைப்பொருள் அவர்கள் கையிலேயே சரியாக வந்து விழுந்துள்ளது.
விடுவிக்கப்பட்ட பின் உணவக உரிமையாளர் செய்த செயல்
அந்த உணவக உரிமையாளரைக் கைது செய்த பொலிசார், விசாரணைக்குப் பின் அவரை விடுவித்துள்ளார்கள்.
ஆனால், மீண்டும் இரண்டு நாட்களுக்குப் பின் அவர் போதை பீட்சா விற்பனையைத் துவக்கியுள்ளார். விட்டுப் பிடித்த பொலிசார் அவரை தொடர்ந்து கண்காணிக்க, அவருக்கு போதைப்பொருள் விநியோகிக்கும் கும்பலே தற்போது சிக்கியுள்ளது.
போதைப்பொருள் விநியோகிப்பவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேரும், மேலும் 12 பேரும் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அதைத்தொடர்ந்து, சுமார் 2 கிலோ போதைப்பொருட்களும் 268,000 யூரோக்கள் ரொக்கமும் அந்த கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிசார் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.