;
Athirady Tamil News

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா… தென்கொரியா விடுத்துள்ள எச்சரிக்கையால் பதற்றம்

0

ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா உதவி செய்தால், தாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நிலை ஏற்படலாம் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ள விடயம் பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

ரஷ்யாவுக்கு வடகொரியா உதவி செய்தால்…
கடந்த வாரத்தில், உக்ரைனில் போர் செய்வதற்காக 1,500 வடகொரிய வீரர்களை ரஷ்யாவுக்கு அந்நாடு பயிற்சிக்கு அனுப்பியுள்ளதாக தென்கொரிய உளவு ஏஜன்சி தெரிவித்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், உடனடியாக வடகொரியா தனது படைவீரர்களை திருப்பி அழைத்துக்கொள்ளவேண்டும் என தென்கொரியா வலியுறுத்தியுள்ளது.

வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ராணுவ கூட்டணி தொடருமானால், நாங்கள் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம் என்று கூறியுள்ளது தென்கொரியா.

சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் தென்கொரிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா விடுத்துள்ள எச்சரிக்கை
தென்கொரியா ஆயுத உற்பத்தியில் முன்னிலை வகித்துவரும் நிலையில், சில மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யவேண்டும் என தென்கொரியாவுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன.

ஆனாலும், தென்கொரியா இதுவரை கண்ணிவெடிகளை அகற்றும் கருவிகள் போன்றவற்றைத்தான் உக்ரைனுக்குக் கொடுத்துவருகிறது.

இந்நிலையில், வடகொரியா ரஷ்யாவுடன் கைகோர்த்துள்ளதுடன், படைவீரர்களையும் அனுப்பலாம் என்னும் தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு ஆயுத உதவு செய்வது குறித்து முடிவு செய்ய இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

முதலில் உக்ரைனுடைய பாதுகாப்புக்காக ஆயுதங்களையும், பின்னர் தாக்குவதற்கான ஆயுதங்களையும் படிப்படியாக வழங்குவது குறித்து முடிவெடுப்போம் என தென்கொரிய ஜனாதிபதி மாளிகை மூத்த அலுவலர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.