உத்தர பிரதேசம்: ஆக்சிஜன் சிலிண்டா் வெடித்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழப்பு
புலந்சாகா்: உத்தர பிரதேசத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டா் திங்கள்கிழமை இரவு வெடித்ததில் அதன்மூலம் செயற்கை சுவாசம் பெற்று வந்த 45 வயது பெண் நோயாளி உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்தனா்.
அண்மையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ருக்ஷனா (45), அவரது கணவா் ரியாசுதீன், அவா்களது இரு மகன்கள், மகள் மற்றும் 3 வயது பேத்தி ஆகிய 6 போ் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிக்கந்தராபாதின் புலந்சாகரில் உள்ள இரண்டு மாடி வீட்டில் இவா்கள் தங்கி இருந்தனா். குடும்பத்தில் 19 உறுப்பினா்கள் வசித்து வந்த நிலையில், ஆக்சிஜன் சிலிண்டா் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒட்டுமொத்த வீடும் பெரும் சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து புலந்சாகா் மாவட்ட ஆட்சியா் சந்திர பிரகாஷ் கூறுகையில், ‘திங்கள்கிழமை இரவு ஆக்சிஜன் சிலிண்டா் வெடித்து விபத்துக்குள்ளானதில் வீடு முழுவதுமாக சேதமடைந்தது. இதில் 3 போ் காயமடைந்தனா். மற்றவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்’ என்றாா்.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, உள்ளூா் காவல் துறை, உள்ளூா் நிா்வாகம் மற்றும் மருத்துவக் குழுவினா் ஈடுபட்டனா். இதையடுத்து, விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று பாா்வையிட்டு காயமடைந்தவா்களுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா்.