நிராதரவாய் உணர்கிறோம்.. பெண் மருத்துவரின் பெற்றோர் அமித் ஷாவுக்கு கடிதம்
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தாங்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் உதவியற்று நிராதரவாக நிற்பது போல உணர்வதாகவும், பெண் மருத்துவரின் தந்தை, மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான பணிச் சூழலில், ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கி, தங்களை சந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
பெண் மருத்துவரின் தந்தை எழுதியிருக்கும் கடிதத்தில், நான் அபயாவின் தந்தை, உங்களை சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் சொல்லும் நேரத்தில், சொல்லும் இடத்தில் சந்திக்க தயார். எங்களது மகளுக்கு நேரிட்ட மிகத் துயரமான சம்பவத்துக்குப் பிறகு, நாங்கள் மிகுந்த மன உளைச்சலிலும், உதவியின்றி ஆதரவற்றவர்களாகவும் உணர்கிறோம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நானும் எனது மனைவியும் உங்களை சந்தித்து, சில விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும், தற்போதிருக்கும் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்று உங்களின் வழிகாட்டுதலைப் பெறவும் விரும்புகிறோம். உங்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம், உங்களுடைய அனுபவமும், வழிகாட்டுதலும் எங்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் நினைக்கிறோம் என்றும் தெரிவித்திருப்பதாகவும் பிடிஐ செய்தி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். ஆக. 9ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில், கல்லூரியில் ஒப்பந்த ஊழியராக, காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றிவரும் சஞ்சய் ராய் என்பவர் முதன்மை குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்துவரும் உச்சநீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.