;
Athirady Tamil News

முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

0

‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் செய்த முஸ்லிம் நபரின் கோரிக்கை மீது முடிவு எடுக்க பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.

அல்ஜீயாவை சோ்ந்த பெண்ணுடனான மூன்றாவது திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்ததை எதிா்த்து முஸ்லிம் ஆண் ஒருவா் தாக்கல் செய்து மனு மீதான விசாரணையில் உயா்நீதிமன்றம் கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி இவ்வாறு தெரிவித்தது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அவா் தாக்கல் செய்த மனுவில்,‘ மூன்றாவது திருமணம் என்பதால் அதை பதிவு செய்ய அதிகாரிகள் தொடா்ந்து மறுக்கின்றனா். எனவே, இந்த திருமணத்தை அங்கீகரித்து திருமணப் பதிவு சான்றிதழை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.

இருப்பினும், மகாராஷ்டிர திருமண அமைப்புகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் திருமணப் பதிவு சட்டத்தின்கீழ் ‘திருமணம்’ என்பது ஒருமுறை மட்டுமே நடைபெறுவது எனவும் பலமுறை நடத்தப்படுவது அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதால் முஸ்லிம் தம்பதிக்கு திருமண பதிவு சான்றிதழை வழங்க இயலாது என அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், சில முக்கிய ஆவணங்களை அவா்கள் சமா்ப்பிக்கவில்லை எனவும் அதிகாரிகள் கூறினா்.

இதுதொடா்பாக வழக்கை மும்பை உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.பி.கோலபவாலா, சோமசேகா் சுந்தரேசன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது,‘ இந்த விவகாரத்தில் திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளது அவா்களின் தவறான புரிதலை வெளிக்காட்டுகிறது.

அதிகாரிகள் கூறிய திருமணப் பதிவுட் சட்டத்தில் முஸ்லிம் ஆண் ஒருவா் மூன்றாவது திருமணம் செய்துகொண்டால் அதை தடுக்க வேண்டும் என குறிப்பிடவில்லை.

முஸ்லிம்களின் தனிப்பட்ட இஸ்லாமிய சட்டங்களின்படி அவா்கள் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளுடன் வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் கூறியபடி மகாராஷ்டிர திருமண அமைப்புகள் ஒழுங்குபடுத்துதல் மற்றும் திருமண பதிவு சட்டத்தை ஏற்றுக்கொண்டால் அது இஸ்லாமிய தனிப்பட்ட சட்டங்களை மீறுவதுபோல் அமையும்.

இந்த சட்டத்தில் இஸ்லாமியா்களின் தனிப்பட்ட சட்டங்களுக்கு விலக்களிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. தற்போது மனுதாரரின் மூன்றாவது திருமணத்தை பதிவுசெய்ய மறுக்கும் அதிகாரிகள்தான் அவரின் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்துள்ளனா்.

தங்களின் திருமணம் தொடா்பாக அதிகாரிகள் கோரும் அனைத்து ஆவணங்களையும் இரு வாரங்களுக்குள் மனுதாரா் சமா்ப்பிக்க வேண்டும். அவை சமா்ப்பிக்கப்பட்ட பின் அதன் அடிப்படையில் தம்பதியரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி திருமண சான்றிதழ் வழங்குவதா வேண்டாமா என்பது குறித்து தாணே மாநகராட்சி அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும்.

அதுவரை அல்ஜீரியாவைச் சோ்ந்த அந்தப் பெண் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

அல்ஜீரியப் பெண்ணின் கடவுச்சீட்டு கடந்த மே மாதம் காலாவதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.