ஹிஸ்புல்லா படைகளின் புதிய தலைவரும்… உறுதி செய்த இஸ்ரேல்
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு அடுத்து தலைமைப் பொறுப்புக்கு வர இருந்தவரையும் கொலை செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா படைகளுக்கு பேரிடியாக
கிட்டத்தக்க 3 வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இது ஹிஸ்புல்லா படைகளுக்கு பேரிடியாக அமைந்தது.
ஆனால் தற்போது அடுத்து தலைவர் பொறுப்புக்கு வருவார் என கூறப்பட்ட Hashem Safieddine என்பவரும் பெய்ரூட்டில் இஸ்ரேலின் விமானப் படை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
இஸ்ரேலுடன் போராடி வரும் சக்திவாய்ந்த லெபனான் ஷியா முஸ்லீம் அமைப்பான ஹிஸ்புல்லா இதுவரை, சஃபிதீனின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை. செப்டம்பர் 27ம் திகதி பெய்ரூட்டில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
அக்டோபர் 4ன் திகதி நகரின் விமான நிலையத்திற்கு அருகே வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஹிஸ்புல்லா நிர்வாகிகள் சஃபிதீனுடனான தொடர்பை இழந்ததாகக் கூறியுள்ளனர்.
இதனிடையே, அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, சஃபிதீன் இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறியது. அன்றிரவு இஸ்ரேல் விமானங்கள் உக்கிரமான தாக்குதலை முன்னெடுத்துள்ளதுடன், அதன் பரபரப்பு பகல் வரையில் நீடித்தது.
பயங்கரவாத அமைப்பாக
செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலி ஹுசைன் ஹசிமாவுடன் சஃபிதீன் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இதில் அலி ஹுசைன் ஹசிமா ஹிஸ்புல்லாவின் புலனாய்வுத் தலைமையகத்தின் தளபதி என கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு இராணுவ, அரசியல் மற்றும் சமூக அமைப்பாகும், இது லெபனானில் கணிசமான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளால் இது பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் காஸா மீதான இஸ்ரேல் போர் தொடங்கியதன் பின்னர், ஹிஸ்புல்லா படைகளை குறிவைத்து இஸ்ரேல் முன்னெடுத்துவரும் தாக்குதலில் குறைந்தது 2,464 லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 12,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.