ஒன்லைனில் கடன்பெற்ற திருமணமான இளைஞர் எடுத்த விபரீத முடிவு
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஒன்லைன் செயலியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத இளைஞர், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கிட்டு உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். 27 வயதான இவர் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சுபாஷினி என்ற பெண்ணுடன் யுவராஜுக்கு திருமணமானது. இந்த தம்பதிக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில், யுவராஜ் தனது வீட்டில் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
ஒன்லைனில் கடன்
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யுவராஜின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது யுவராஜ் கடந்த ஒரு மாதமாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் பணத்தேவைக்காக அவர் ஒன்லைன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார்.
ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் இருந்ததால், குறித்த கடன் செயலியில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.