;
Athirady Tamil News

தென்னிலங்கையின் மாய வலைக்குள் எம்மவர் சிலர்! வேதனை தருகிறது – சசிகலா ரவிராஜ்..

0

தமிழ்த் தேசிய உணர்வை குழி தோண்டிப் புதைக்க முயலும் தென்னிலங்கை சக்திகளின் அபிவிருத்தி, மாற்றம் என்ற மாயவலைக்குள் எம் மக்களில் சிலர் சிக்கித் திண்டாடிவருவது வேதனை தருகிறது என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்

கைதடியில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் பூர்வீக பூமி மேலைத்தேய அந்நிய சக்திகளால் அபகரிக்கப்பட்டது. பின்னர் இலங்கை மக்களுக்கு சுதந்திரம் என்று அறிவிக்கப்பட்டு நாட்டின் ஆட்சி அதிகாரம் தென்னிலங்கை சக்திகளிடம் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் தரப்படுத்தல், தனிச்சிங்களச் சட்டம் உட்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் அநீதிகளுக்கு எதிராக எமது மூத்த தலைவர்களால் ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனநாயக குரல்களும் நசுக்கப்பட்ட நிலையில் அன்றைய இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி உரிமைகளுக்காகப் போராடினர். அதே நேரம் அறவழியிலும் போராடினர்.

போராட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜனநாயக ரீதியில் குரலெழுப்ப வேண்டிய கடப்பாடு எமது அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டது.

துரதிஸ்டவசமாக எமது தலைவர்களும் நேர்த்தியான முறையில் எமக்கான உரிமைகளுக்காக போராடவில்லை.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள், அபிவிருத்தி, மாற்றம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை போன்ற மாய வலைகளை எம்மவர்களை நோக்கி வீசி வருகின்றனர்.

இத்தனை ஆயிரம் உயிர்த்தியாகங்களின் தொடராக எமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கவேண்டியர்களாக நாங்கள் இருக்கிறோம்.

ஆனால் சிலர் தென்னிலங்கை சக்திகள் வீசும் மாயவலைகளில் சிக்கி திண்டாடுவதுடன், தமக்கு நெருக்கமானவர்களையும் மடைமாற்ற முற்படும் அவலம் நிகழ்ந்து வருகிறது. எங்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் குறைந்தது ஒவ்வொரு உயிர்கள் உரிமைக்காக வீழ்ந்திருக்கின்றன என்பதை எம்மவர்களில் சிலர் மறந்துவருவது மிகுந்த வேதனை தருகின்றது.

உயிர்விலைகளைக் கடந்து அர்ப்ப சொற்ற வாக்குறுதிகள் பெறுமதியானவையா? என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

எமக்கான உரிமைக்கான குரல்களை வலுப்படுத்த எமது மக்கள் ஒன்றிணைய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.