ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – எக்ஸ் தளத்தை குற்றஞ்சாட்டும் மத்திய அரசு
ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர்.
விமானங்களுக்கு மிரட்டல்
கடந்த சில நாட்களாக இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு சொந்தமான தேச, சர்வதேச விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த 11 நாட்களில் 250க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (24.10.2024) மட்டும் 85க்கு மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
3 கோடி இழப்பு
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஏர் இந்தியாவிலிருந்து 20 விமானங்களுக்கும், இண்டிகோவிலிருந்து 20 விமானங்களுக்கும், விஸ்தாராவிலிருந்து 20 விமானங்களுக்கும், ஆகாசா ஏர்லைன்ஸின் 25 விமானங்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை மிரட்டல் வந்தபோதும் அதனை அலட்சியப்படுத்தாமல் பாதுகாப்பு முகமைகளின் சார்பில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் பின் புரளி என தெரியவந்துள்ளது. இதனால் விமானம் தாமாதமாக கிளம்புகிறது.
இந்த புரளிகளால் விமானத்தைத் தரையிறக்குவதற்கான எரிபொருள் செலவு, விமான நிலையக் கட்டணம், பயணிகளுக்கான இழப்பீடு என ஒவ்வொரு முறையும் சுமார் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ் தளம்
இவ்வாறான மிரட்டல்களை கட்டுப்படுத்தும் விதமாக, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், மிரட்டல் விடுப்பவர்களை 5 ஆண்டுகளுக்கு நோ-ஃப்ளை பட்டியலில் வைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. அதுபோல், மேலும் வெடிகுண்டு மிரட்டல்களால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.
எக்ஸ் தளத்தின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் ஐடி மற்றும் டொமைன் தொடர்பான தகவல்களை போலீஸ் கோரியுள்ளது. ஆனால் தளத்தின் தனிநபர் உரிமைகள் காரணமாக எக்ஸ் தளம் அந்த தகவல்களைத் தர மறுத்துள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் இந்த குற்றத்திற்கு உடந்தையாக உள்ளதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.