;
Athirady Tamil News

Cyclone Dana : 120 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது ‘டானா’ புயல்… மிரட்டிய கனமழையால் தவித்த இரு மாநிலங்கள்!

0

‘டானா’ புயல், வடக்கு ஒடிசாவில் அதிகாலையில் கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் முன் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களின் கரையோரப் பகுதிகளைப் புயல் சூறையாடியது.

வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல் நேற்று அதிகாலையில் தீவிரப் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. நள்ளிரவு 12.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப் பகுதிக்கு வடகிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும், தாமரா பகுதிக்கு தென்கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. தொடர்ந்து, ‘டானா’ புயல் நிலப்பரப்பை நோக்கி நகரத் தொடங்கியது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா கடற்கரை அருகே உள்ள பிதர்கனிகா மற்றும் தாமரா இடையே அதிகாலையில் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

‘டானா’ தீவிரப் புயல் கரையைக் கடந்த நிலையில், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து, முற்பகலில் புயலாக நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

என்னென்ன பாதிப்பு?: இதற்கிடையே, ஒடிசாவில் கடற்கரையோர நகரங்களை ‘டானா’ புயல் சூறையாடியது. ‘டானா’ புயல் கரையைக் கடப்பதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னதாகவே வடக்கு ஒடிசாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.

புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. லசோர், பத்ரக், பிதர்கானியா, புரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

புயல் முன்னெச்சரிக்கையாக ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டன. முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, புவனேஷ்வரில் உள்ள மாநில அவசர காலக் கட்டுப்பாட்டு அறையில் தங்கியிருந்தபடி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணித்தார்.

‘டானா’ புயல் ஒடிசாவில் கரையைக் கடந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புர்பா மிதினாபூரில் உள்ள திகா கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஹவுராவில் உள்ள மாநில அவசர காலக் கட்டுப்பாட்டு அறையில் தங்கியிருந்து புயலின் நகர்வுகளைக் கவனித்து அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.