;
Athirady Tamil News

ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

0

புதிய இணைப்பு
ஈரான் மீது நேற்று காலை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2ஆவது வீடியோ பதிவில், “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும்.

நாங்கள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். இதன் மூலம், இஸ்ரேல் அரசுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்தோம். ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமானால், இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
ஈரானில் (Iran) இராணுவ தளங்கள் மீது “துல்லியமான தாக்குதல்களை” நடத்தி வருவதாக இஸ்ரேல் (Israel) பாதுகாப்புப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியிட்ட காணொளியில் குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் (Tehran) மீதான தாக்குதலை இஸ்ரேல் நேற்று சனிக்கிழமை (26.10.2024) அதிகாலை ஆரம்பித்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்
ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களை குறிவைத்து நடந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் இராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தினால், அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலால் ஈரானில் பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டால், பதிலுக்கு ஈரான் இராணுவம் மிகப்பெரிய அளவில் பதில் தாக்குதல் நடத்தும் என்றும், அதே சமயம் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கேற்றவாறு பதிலடி கொடுப்போம் என்றும் ஈரானைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்
இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை பதிவில், இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானில் உள்ள ஆட்சியும், பிராந்தியத்தில் அதன் ஆதாரவாளர்களும் அக்டோபர் 7ம் திகதி முதல் ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர்.

உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன.

இஸ்ரேல் நாட்டையும் இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.