விமான வெடிகுண்டு மிரட்டலின் பின்னணியில் குடும்பச் சண்டைகளும் காரணமா?
மும்பை: நாள்தோறும் தங்கம் விலை போல, எத்தனை விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்ற செய்திகள் வெளியாகத் தொடங்கிவிட்ட நிலையில், மும்பையில், ஒரு பெண்ணின் பெயரில் வந்த வெடிகுண்டு மிரட்டலின் பின்னணியில், அவரது உறவினர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர், மனித வெடிகுண்டாக மாறியிருப்பதாகவும், அவர் தனது காதலனை சந்திக்க ரூ.90 லட்சத்துடன் விமானத்தில் சென்றுகொண்டிருப்பதாகவும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர். தில்லி விமான நிலைய கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் சொன்த பெண்மணியின் பெயர் கௌரி பர்வானி என்பதும், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தது அவரது உறவினர் என்பதும் தெரிய வந்துள்ளது.
கௌரி பர்வானி என்பவர் மனித வெடிகுண்டாக இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து, இந்த பெயரில், மும்பையிலிருந்து செல்லும் எந்த விமானத்திலாவது யாராவது பயணிக்கிறார்களா என்று ஒரு பக்கம் விசாரணை தொடங்கியது. தொலைபேசி வந்த முகவரியை காவல்துறையினர் விசாரித்தபோது, அங்கிருந்த கௌரி, பல ஆண்டுகளுக்கு முன்பே வேறு இடத்துக்குச் சென்றுவிட்டதாகவும், அவருக்கு 60 வயது இருக்கும் என்றும், அவர் எந்த விமானத்திலும் செல்ல டிக்கெட் எடுக்கவில்லை என்றும் தெரிய வந்தது.
கௌரிக்கும் அவரது உறவினருக்கும் இருக்கும் பிரச்னை காரணமாக, அவர்தான் இந்த வெடிகுண்டுமிரட்டலை விடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
கடந்த 11 நாள்களில் மட்டும் சாஹர் காவல்நிலையத்தில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரிதல், ஒரே ஒரு வழக்கு மட்டும்தான் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த வழக்கில் 17 வயது சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.