ஒரே நாளில் 60 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஏா் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்குச் சொந்தமான தலா 21 விமானங்கள் மற்றும் விஸ்தாரா நிறுவனத்தின் 20 விமானங்களுக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதேபோல், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 410-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு கடந்த 15 நாள்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் இதுபோன்ற தவறான தகவல்களை உடனடியாக அகற்றவும், மிரட்டல் விடுக்கப்படும் பக்கங்களை முடக்கவும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
தொடரும் இதுபோன்ற நிகழ்வுகளால், விமானப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிடுவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு அண்மையில் தெரிவித்தாா். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா்களுக்கு விமானத்தில் பறக்க நிரந்தர தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைள் எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.