கேரளம்: கோயில் விழாவில் பட்டாசு வெடித்து 154 பேர் காயம்
கேரள மாநிலம், நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்ததில் 154 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு (எஸ்.ஐ.டி.) கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசை கொளுத்திய ராஜேஷ், கோயிலின் தலைவர் சந்திரசேகரன், செயலர் பரதன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளத்தின், காசர்கோட்டின் நீலேஸ்வரம் அருகே உள்ள வீரர்காவு கோயிலில் திங்கள்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை கூறியதாவது:
“தெய்யம்’ சடங்கை நிறைவேற்ற பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் வீரர்காவு கோயிலில் திரண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
பட்டாசுகளின் தீப்பொறிகள், கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு குவியலின் மீது விழுந்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 154 பேர் காயமடைந்தனர். இவர்கள் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும், அண்டை மாநிலமான கர்நாடகத்தின் மங்களூரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து வெடிபொருள் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கோயில் நிர்வாகத்தினர் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு விசாரணைக் குழு அமைத்து காசர்கோடு மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் டி.ஷில்பா உத்தரவிட்டுள்ளார் என்றனர்.