ரூ.120 கோடிகளை 4 மாதத்தில் இழந்த இந்தியர்கள் – புது வகையான டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி
இந்தியாவில் புதிதாக அரங்கேறி வரும் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற புது வகையான மோசடி குறித்து பார்க்கலாம்.
டிஜிட்டல் மோசடி
டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில் தினமும் பல்வேறு வகையான டிஜிட்டல் மோசடிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஒரு நாளுக்கு சராசரியாக 7000 பேர் டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர் என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டு புகார் அளிக்கத்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்க கூடும்.
டிஜிட்டல் அரெஸ்ட்
இந்நிலையில் தற்போது புது வகையான டிஜிட்டல் அரெஸ்ட் என்னும் மோசடி அரங்கேறி வருகிறது. இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும், டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் இந்தியர்கள் ரூ. 120 கோடியை இழந்துள்ளனர். இந்த மோசடியில் சாதாரண மக்கள் முதல் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட்
இந்த மோசடி எவ்வாறு நடைபெறுகிறது என்று காணலாம். இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள், சிபிஐ, டிராய், அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சுங்கத் துறை, காவல்துறை அதிகாரிகள் என்பது போல் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வார்கள். உங்களின் நம்பிக்கையை பெற வாட்ஸ்ஆப்பி காவல் அதிகாரி போன்ற புகைப்படத்தை வைத்திருப்பார்கள்.
போலியான அலுவலகம்
தொலைபேசியிலோ அல்லது வாட்சாப்பிலோ அழைத்து உங்கள் மீது நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு, கிரெடிட் கார்டு அல்லது சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது, போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். அதன் பிறகு காவல்நிலையத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கோ நேரில் வந்து ஆஜராக வேண்டும் என கூறுவார்கள்.
அவர்கள் உண்மையான அதிகாரி என நம்ப வைப்பதற்காக உங்களுக்கு போலியான அரசு முத்திரையுடன் போலியான வாரண்ட் தயாரித்து அனுப்புவார்கள். உடனே நேரில் ஆஜராக முடியாவிட்டால் வீடியோ கால் விசாரணையில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கூறுவார்கள். நீங்கள் வீடியோகால் செய்ததும் சீருடையில் அதிகாரி போன்ற ஒரு நபர் இருப்பார். பின்னணியில் அரசு அலுவலகம் அல்லது காவல்துறை போன்ற செட்டப் இருக்கும்.
நீங்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுளீர்கள் யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது என தெரிவிப்பார்கள். அறையில் நீங்கள் மட்டும்தான் இருக்குறீர்களா என உறுதிப்படுத்த வீடியோ காலில் நீங்கள் இருக்கும் அறையை காட்ட சொல்லி கேட்பார்கள்.
உதவுவது போல் மோசடி
அதன்பின், விசாரணையில் உங்கள் முகவரி, வங்கி கணக்கு போன்ற விவரங்கள் சேகரிக்கபடும். மேலும், இந்த வழக்கிலிருந்து உங்களை விடுவிக்க குறிப்பிட்ட பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு அளிக்க வேண்டும் என கூறுவார்கள். நீங்கள் பணத்தை அனுப்பிய பின் கால் கட் ஆகி விடும். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.
நீங்கள் பணத்தை அனுப்பாத நிலையில், நீதிபதி போல் தோற்றம் கொண்ட ஒருவர் பின்னனியில் நீதிமன்றம் போன்ற செட்டப் வைத்து அழைத்து உங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறுவார். நீங்கள் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என மோசடியாளர்களிடம் உறுதியாக தெரிவித்தால் கூட, ‘நீங்கள் தவறாக சிக்க வைக்கப்பட்டுளீர்கள். இந்த சிக்கலில் இருந்து நீங்கள் மீள நாங்கள் உதவுகிறோம்’ என கூறி தங்களது மோசடியை அரங்கேற்ற முயல்வார்கள்.
தப்பிக்க டிப்ஸ்
இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். டிஜிட்டல் அரெஸ்ட் என்ற முறைக்கு இந்திய சட்டத்தில் இடம் கிடையாது.
அரசின் விசாரணை அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் ஒருபோதும் பணம் அல்லது வங்கி சார்ந்த விவரங்களை கேட்க மாட்டார்கள். வீடியோ காலில் ஆஜராகவும் கூற மாட்டார்கள்.
இது போன்ற சமயங்களில் பதற்றம் அடையாமல் நிதானமாக இருக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் அழுத்தம் மற்றும் அவசர நிலைக்கு வேகம் காட்ட கூடாது. தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளில் முகவரி, வங்கி கணக்கு, ஒடிபி என எந்த தகவலையும் பகிர வேண்டாம்.
மோசடி என சந்தேகம் இருந்தால் உள்ளூர் காவல் துறை மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். அல்லது ‘1930’ என்ற உதவி எண்ணில் தேசிய சைபர் கிரைமில் தகவல் அளிக்கலாம்.
புகார் அளிப்பது எப்படி
இந்த மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் செய்ய வேண்டியது குறித்து பார்ப்போம்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கியை தொடர்பு கொண்டு வங்கி கணக்கை முடக்க வேண்டும்.
cybercrime.gov.in என்ற தேசிய சைபர் கிரைம் தளத்தில் புகார் அளிக்க வேண்டும்.
தொலைபேசி அழைப்பு விவரங்கள், பண பரிவர்த்தனை சார்ந்த விவரங்கள், மெசேஜ்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வசம் உள்ள ஆதாரங்களை பத்திரப்படுத்த வேண்டும்.
அதிகரிக்கும் புகார்கள்
இந்தியாவில் இணைய வழி மோசடி தொடர்பாக பதிவாகும் புகார்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு 4.5 லட்சம் புகார்களும், 2022 ஆம் ஆண்டு 9.60 லட்சம் புகார்களும், 2023 ஆம் ஆண்டு 15 லட்சம் இணையவழி மோசடி புகார்களும் பதிவாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 7.4 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில், டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் ரூ.120.3 கோடியையும், இணையவழி வர்த்தகம் என்ற பெயரில் ரூ.1,420.48 கோடியையும், முதலீட்டு மோசடியால் ரூ.222.58 கோடியையும், ரொமன்ஸ் மோசடியால் ரூ.13.23 கோடியையைும் இந்தியர்கள் பறிகொடுத்துள்ளனர்.