வாக்குறுதிகளை நிறைவேற்றாத அநுர : சஜித் பகிரங்கம்
ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நடைபெறவில்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
தெமட்டகொட (Dematagoda) பகுதியில் நேற்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது எமது நாடு மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது.
சர்வதேச நாணய நிதியம்
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். வரிச்சுமை குறையும் என நாடு காத்திருந்தது.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைக்குப் பின், வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. வற் உள்ளிட்ட நேரடி மற்றும் மறைமுக வரிகளைக் குறைக்க முடியாது போயுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளையும் அவரால் நிறைவேற்ற முடியாது போயுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின், வரிச்சுமையைக் குறைக்கப்பட வேண்டுமாயின், கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டுமாயின், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.