ஐரோப்பிய நாடொன்றில் மூன்று நாள் துக்கமனுசரிப்பு… இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
தெற்கு மற்றும் கிழக்கு ஸ்பெயினில் பெய்த கனமழையால் குறைந்தது 72 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தொடரும் என எச்சரிக்கை
கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் பெருக்கெடுத்து, முதன்மையான நகரங்களில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை துண்டித்துள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடுமையான வானிலை இன்னும் தொடரும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், மக்கள் சாலைகளில் இருந்து விலகி, பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளில் இருந்து விலகி இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மட்டுமின்றி, இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இதனிடையே, வலென்சியன் அரசாங்கத்தின் அவசர ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
சமீபத்திய இறப்பு எண்ணிக்கை எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும், ஆனால் இதுவரை பிராந்தியத்தில் மழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 70 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளம் அல்லது துண்டிக்கப்பட்ட சாலைகளில் இருந்து விலகி இருக்குமாறு பிராந்திய அரசாங்கம் மக்களை வலியுறுத்தியது. ஸ்பெயினின் அவசரகால பதிலளிப்பு பிரிவுகளில் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பேரிடர் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மூன்று நாட்கள் தேசிய துக்கம்
தேவைப்பட்டால் மொபைல் சவக்கிடங்கை வழங்கவும் தயார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இதேபோன்ற இலையுதிர்கால புயல்களை ஸ்பெயின் எதிர்கொண்டுள்ளது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட பேரழிவுகளுடன் ஒப்பிடுகையில் அது ஒன்றுமில்லை என்றே மக்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே, மூன்று நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டதுடன் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஸ்பெயினின் காங்கிரஸ் புதன்கிழமை மவுன அஞ்சலி செலுத்தியது.
இந்த நிலையில், இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தனது கவலையை பதிவு செய்துள்ள மன்னர் பெலிப், வெள்ளம் மற்றும் அதன் இறப்புகள் பற்றிய செய்தியால் மனம் உடைந்ததாகக் கூறியுள்ளார்.