;
Athirady Tamil News

மரண தண்டனையை நிறைவேற்றிய ஈரான்… ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு

0

ஜேர்மன்-ஈரானியரான ஜம்ஷித் ஷர்மாத் தூக்கிலிடப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக ஜேர்மனி தனது நாட்டில் உள்ள ஈரானிய தூதரகங்களை மூடிவிடும் என வெளிவிவகார அமைச்சர் அனலேனா பேர்பாக் தெரிவித்துள்ளார்.

கடுமையான விளைவுகளை

இந்த விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அனலேனா பேர்பாக் தெரிவிக்கையில், ஜேர்மானியர் ஒருவரை தூக்கிலிடுவது என்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் சந்தேகத்திற்கு இடமின்றி ஈரானுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார்.

இந்த நிலையில், தற்போது பிராங்பேர்ட், முனிச் மற்றும் ஹாம்பர்க்கில் உள்ள ஈரானிய தூதரகங்கள் மூடப்படும் என அமைச்சர் தமது தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, திங்களன்று அறிவிக்கப்பட்ட மரணதண்டனை ஏற்கனவே தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை தூண்டியது. மட்டுமின்றி, ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் இச்சம்பவத்தை அவமானம் என்றே குறிப்பிட்டிருந்தார்.

69 வயதான ஷர்மாத், கடந்த 2008ல், ஈரானிலுள்ள Shiraz பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்துக்கும் ஷர்மாத்துக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு அவருக்கு 2023ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300 பேர்கள் காயங்களுடன் தப்பியிருந்தனர். ஆனால் ஷர்மாத் நிரபராதி என்றே அவரது குடும்பத்தினர் நீண்ட காலமாக கூறி வந்தனர்.

தண்டனையிலிருந்து விலக்கு அளிக்காது
இருப்பினும், ஈரான் அவரது மரணதண்டனையை ஆதரித்ததுடன், ஒரு ஜேர்மன் கடவுச்சீட்டு ஒரு பயங்கரவாத குற்றவாளிக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்காது என விளக்கமளித்தது.

ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த ஷர்மாத் ஒரு ஜேர்மன் குடிமகன் மற்றும் ஒரு அமெரிக்க குடியிருப்பாளர். மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்துள்ள ஷர்மாத், ஈரான் தலைமைக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தவர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் வழியாக பயணம் செய்தபோது ஈரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.