உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்கள்: எச்சரிக்கும் அமெரிக்கா
உக்ரைன் எல்லையில் சுமார் 8,000 வடகொரிய வீரர்கள் நிலைகொண்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 10,000
எதிர்வரும் நாட்களில் வடகொரிய துருப்புக்களை உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபடுத்த ரஷ்யா தயாராகி வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவிற்கு மொத்தம் 10,000 துருப்புக்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக அமெரிக்கா நம்புவதாக ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். உக்ரைனின் எல்லையில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்திற்கு வடகொரிய வீரர்களை அனுப்புவதற்கு முன்பு, அவர்களை முதலில் தூர கிழக்கில் உள்ள பயிற்சி தளங்களுக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது.
வடகொரிய வீரர்களுக்கு ரஷ்யா அளித்துள்ள பயிற்சிகள் தொடர்பாக வெளியான தகவலின் அடிப்படையில், வடகொரிய படைகளை முன்னணி நடவடிக்கைகளில் பயன்படுத்த ரஷ்யா முழுமையாக உத்தேசித்திருக்கலாம் என ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துவரும் ஊடுருவல் நடவடிக்கையில், முதல் முறையாக வெளிநாட்டு ராணுவத்தை ரஷ்யா களமிறக்குகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரியப் போராக இது விரிவடையலாம் என்றே அஞ்சப்படுகிறது.
கடுமையாக எச்சரித்துள்ளனர்
வடகொரிய துருப்புக்களிடம் ரஷ்யா திரும்புவதற்கான காரணங்களில் ஒன்று, ரஷ்யாவின் மிக மோசமான நிலை என்றே பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, வெளிவிவகாரத்துறை மற்றும் பென்டகன் ஆகியவற்றின் அதிகாரிகள் அனைவரும் வட கொரிய துருப்புக்களை உக்ரைன் போரில் களமிறக்கும் செயலை கடுமையாக எச்சரித்துள்ளனர்.
அப்படி நடந்தால், வடகொரிய வீரர்கள் ஒரு முறையான இராணுவ இலக்காக மாறுவார்கள் என்றும் பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியப் படைகள் சில நாட்களில் இணையலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்னதாக எச்சரித்திருந்தார்.
மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் பதில்களுக்கான ஒரு சோதனையாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.