பதுளை கோர விபத்து: காயமடைந்தவரை விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுசெல்லும் முயற்சி தோல்வி
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த நபரை விமானம் மூலம் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரை விமானப்படையின் உலங்குவானூர்தி மூலம் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்த நபரை அம்புலன்ஸ் மூலம் பதுளை கால்பந்து மைதானத்திற்கு அழைத்து வந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக விமானம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், காயமடைந்த நபரை மீண்டும் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
35 பேர் வைத்தியசாலையில் அனுமதி
இன்று (01) காலை (01) பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நீர்வீழ்ச்சியை கடந்து அம்பகஹஓய பிரதேசத்தில் பதுளையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதில் பேருந்தில் பயணித்த 35 பேர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
நிவித்திகல மற்றும் குருநாகல் பிரதேசங்களில் வசிக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் விபரம்
சூரியவெவ, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று கல்வி நடவடிக்கைக்காக சென்று கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது.
சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் வளைவு ஒன்றிற்கு அருகில் பேருந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும், உயிரிழந்த இரு மாணவிகளின் சடலங்களும் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.