தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால்… இளவரசர் ஹரி நாடுகடத்தப்படலாம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், யார் பெற்றி பெறுவார் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
அதே நேரத்தில், அமெரிக்காவில் குடியேறியுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும்கூட, சற்று பதற்றத்துடனேயே தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 5ஆம் திகதி, அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக, முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பும், இந்நாள் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸும் களத்தில் இருக்கிறார்கள்.
தேர்தலில் யார் பெற்றி பெறுவார் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள், பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவியான மேகனுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
காரணம், தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால், அது ஹரி மேகன் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
ஏனென்றால், ஹரி மேகன் தம்பதியரை ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சித்துவந்தார் ட்ரம்ப். அத்துடன், தான் ஜனாதிபதியானால், ஹரி நாடுகடத்தப்படலாம் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
குறிப்பாக, தான் போதைப்பொருள் எடுத்துக்கொண்டதாக ஹரி கூறிய விடயம் அவரது அமெரிக்க விசா விடயத்தில் பிரச்சினை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
ஹரிக்கு விசா வழங்கப்பட்ட விடயம் குறித்தும் விமர்சித்த ட்ரம்ப், ஜோ பைடன் ஹரியை பாதுகாப்பதாகவும், தான் அப்படி பாதுகாக்கமாட்டேன் என்றும் கூறியுள்ளதால், ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவாரானால், அது ஹரிக்கு பெரும் சிக்கலாக அமையக்கூடும் என அஞ்சப்படுகிறது.