பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதல்: சேலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 4 போ் உயிரிழப்பு
கேரள மாநிலம், பாலக்காடு கோட்டத்துக்கு உள்பட்ட சொரனூா் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், சேலத்தைச் சோ்ந்த துப்புரவுத் தொழிலாளா்கள் 4 போ் உயிரிழந்தனா்.
பாலக்காடு அருகே உள்ள பாரதப்புழா ஆற்றின் மேல் அமைந்துள்ளது சொரனூா் ரயில்வே பாலம். இந்தப் பாலத்தில் தூய்மைப் பணி நடைபெற்று வரும் நிலையில், சேலம், அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சோ்ந்த ஒப்பந்த ஊழியா்களும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வந்த எக்ஸ்பிரஸ் ரயில், தொழிலாளா்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில், சேலத்தைச் சோ்ந்த ஒப்பந்தத் தொழிலாளா்கள் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விசாரணையில், உயிரிழந்தவா்கள் சேலம், அயோத்தியாப்பட்டணத்தைச் சோ்ந்த லட்சுமணன் (48), ராணி (45), வள்ளி (55), லட்சுமணன் (60) ஆகியோா் என தெரியவந்தது. விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த 4 பேரும் கேரளத்தில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்களாக பணியாற்றி வந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.