நெடுந்தீவு கரையோரங்களை கடலடியில் இருந்து பாதுகாக்க கோரிக்கை
நெடுந்தீவு கரையோர பிரதேசங்களை கடல் அரிப்பில் காக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் சுலக்சன் தலைமையில், சக வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை நெடுந்தீவு பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன் போது, நெடுந்தீவு கரையோர பிரதேசங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கடலடியினால் கடற்தொழிலாளர்களின் படகுகள் சேதமடைகிறது. வலைகளை கடல் அடித்து சென்று விடும். அதனால் கடலடியை தடுக்க கல்லணைகளை கட்டி தருமாறு , முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பலரிடமும் கோரிக்கை விடுத்தோம்.
அரசாங்கம் ஊடாக சிறு தொகை கிடைக்கப்பெற்றது. அதனை கொண்டு , கற்களை கொட்டி நாமே தற்காலிக கல்லணையை ஏற்படுத்தினோம், கடல் வற்று நேரத்தில் அதனை அமைப்போம். பின்னர் கடல் கொந்தளிப்புகள் ஏற்பட்டால் எம்மால் அமைக்கப்பட்ட அணை தள்ளுப்பட்டு விடும். எனவே நிரந்தரமாக எமக்கு கடலணையை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இருந்தார்.
அதற்கு தன்னால் முடிந்த நடவடிக்கையை நிச்சயம் எடுப்பேன் என உறுதி அளித்த முதன்மை வேட்பாளர் சுலக்சன் , நானும் கடற்தொழிலாளர்கள் சமூகத்தில் இருந்து வந்தவன், கடற்தொழில் செய்பவன் என்ற அடிப்படையில் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் நன்கறிவேன்.
எமது சமூகத்தில் இருந்து ஒருவர் நாடாளுமன்றம் சென்றால் தான் எமது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் பேச முடியும். ஆகவே நடைபெறவுள்ள தேர்தலில் மூக்கு கண்ணாடி சின்னத்திற்கு உங்கள் வாக்குகளை அளித்து , எனது இலக்கமான 3ஆம் இலக்கத்திற்கு உங்கள் விருப்பு வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.