நாகை – யாழ்ப்பாணம் கப்பல் சேவை நாட்கள் அதிகரிப்பு!
இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து, இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து நிர்வாகம் கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை
அதன்படி, வரும் 8-ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை – இலங்கை இடையே ‘சிவகங்கை’ என்ற பயணிகள் கப்பல்சேவை கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கியது. அப்போது, இரு மார்க்கத்திலும் தினமும் கப்பல் இயக்கப்பட்டது.
இந்த நிலையில், பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால், செவ்வாய், வியாழன், ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களாக கப்பல் சேவை குறைக்கப்பட்டது
அதன் பின்னர், சனிக்கிழமை உட்பட 4 நாட்களுக்கு கப்பல் சேவை நடைபெற்ற நிலையில் இனி வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல்சேவை இடம்பெறவுள்ளது.