கனடாவில் இந்துக்கள் கோவில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்: தலைவர்கள் பலர் கண்டனம்
ஒன்ராறியோவில் அமைந்துள்ள இந்துக்கள் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட சம்பவம் வன்முறையில் முடிந்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள்
பிராம்டனில் அமைந்துள்ள இந்து சபை கோவில் அருகே சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் என்றே கூறப்படுகிறது.
பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் நடந்த போராட்டம் குறித்து தங்களுக்குத் தெரியும் என்றே பீல் பிராந்திய காவல்துறை கூறுகிறது. இந்த நிலையில் பெடரல் அமைச்சர் அனிதா ஆனந்த் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில்,
பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறைத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் குறித்து கவலைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு
இந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினருக்கும் இத்தகைய தாக்குதல்கள் இல்லாமல் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவும், தங்கள் மதத்தைப் பின்பற்றவும் உரிமை உண்டு என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
இதனிடையே சமூக ஊடக பக்கத்தில் பரவும் காணொளியில், பிறரை அடிக்க மக்கள் கொடிக்கம்பங்களைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், குறித்த தாக்குதலானது காலிஸ்தான் ஆதரவு அரசியல்வாதிகளின் தூண்டுதல் என இந்து கனடியன் அறக்கட்டளை குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், கன்சர்வேடிவ் தலைவர் Pierre Poilievre இந்த சம்பவம் பற்றி சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றே குறிப்பிட்டுள்ளார்.