யாழில் 34 வருடங்களின் பின் ஐயனாருக்கு திருக்கல்யாணம் !
யாழ்ப்பாணம் 34 வருடங்களின் பின் காங்கேசன்துறை ஐயனார் ஆலய மண்டலாபிஷேக நிறைவான 12 ஆம் நாள் மாலை திருக்கல்யாணம் கடந்த வெள்ளியன்று (01-11-2024) ஐயனார் அடிகள் சூழ சிறப்புற இடம்பெற்றது.
பிரம்ம தேவனின் பூட்டியும் சந்திரனின் மகளான பூர்ணாதேவி மற்றும் சூரியதேவனின் புத்திரியான புஸ்கலாதேவி ஆகியோரை மணம்செய்யும் ஹரிகரபுத்திரன் ஐயனார் திருக்கல்யாண பூஜையானது காங்கேசன்துறை ஏர்புலாப்புலத்தை சேர்ந்த ஐயனார் ஸ்தாபகர் அமரர் வைத்திலிங்கம் சுப்பையா அவர்களின் குடும்பத்தினரால் நடாத்தப்பட்டது .
குறித்த ஐயனார் ஆலயமானது அமரர் வைத்திலிங்கம் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டு அவரினாலே பூஜைகள் மேற்கொண்டு சித்தராக வாழ்ந்து மறைந்ததாகவும் , அவரைத்தொடர்ந்து அவரது மகனான சுப்பையா பூஜைகளை மேற்கொண்டதாகவும் பின்னர் 1981 காலப்பகுதிகளில் பூசாரி முறை நீக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு பூணூல் தரித்த பிராமணர்கள் பூஜை செய்ததாக வரலாறு கூறுகின்றது.
யுத்தம் காரணமாக வலிகாமம் வடக்கு பகுதியில் வசித்து வந்த மக்கள் 1990ஆம் ஆண்டு ஆரம்ப கால பகுதிகளிலேயே தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறிவிட்டனர் . சுமார் 34 வருடங்களின் பின்னர் அப்பகுதி மக்களை மீள குடியமர அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் , ஐயனார் ஆலயம் அப்பகுதி மக்களால் மீள புனரமைப்பு செய்யப்பட்டது.
அத்துடன் , புதிதாக பரிவார தெய்வங்களுக்கான சந்நிதிகள் அமைக்கப்பட்டு புது பொழிவுடன் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு , கடந்த ஐப்பசி 18 ஆரம்பமான கும்பாபிஷேக கிரியைகளை தொடர்ந்து 21 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.