2012 மகசின் சிறைச்சாலை மோதல் : 24 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை
2012ஆம் ஆண்டு மகசின் சிறைச்சாலையில் (Magazine Prison) இடம்பெற்ற மோதல்களின் போது கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் (Supreme Court of Sri Lanka) இன்று (04) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2012 இல் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களின் போது ஒரு குழுவினரைத் தாக்கியமை மற்றும் சிறைச்சாலைக்குச் சொந்தமான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்டனர்
அத்துடன் வழக்கு விசாரணையின் போது சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 43 சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில், மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நிஹால் குணவர்தனவுக்கு மூன்று இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, சந்தேகநபர்கள் தலா 7,000 ரூபா வீதம் அடுத்த நீதிமன்றத் திகதியில் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் மகசின் சிறைச்சாலைக்கு ஏற்பட்ட 52 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான சேதங்களுக்கு சந்தேகநபர்கள் தலா ஒரு இலட்சத்து 22 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறும், டிசம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் நட்டஈட்டை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.