சொகுசு கார் விவகாரம் : லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Ratwatte) மனைவி ரஷி பிரபா ரத்வத்தவும் (Shashi Prabha Ratwatte) எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் இன்று (04) அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்று கங்கொடவில நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத கார் கண்டுபிடிப்பு
சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான காவல் நிலையத்தில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அதன்படி, இன்று (04) நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை நுகேகொட, மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் லொஹான் ரத்வத்த ஒக்டோபர் 31ஆம் திகதி கண்டி, கட்டுகஸ்தோட்டையில் வைத்து மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ரத்வத்த, தடுப்புக் காவலில் இருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 02 ஆம் திகதி சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.