இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு
இந்தோனேசியாவின்(Indonesia) கிழக்குப் பகுதியில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி – லாகி எரிமலையே நேற்று முன் தினம் (03.11.2024) வெடித்துள்ளது.
இதன்போது, அதிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பு வழிந்தோடியதோடு, கரும்புகையும் அப்பகுதியை சூழ்ந்துள்ளது.
எரிமலை வெடிப்பு
இதேவேளை, எரிமலை வெடிப்பால் அருகிலுள்ள கிராமங்களில் பல கிலோமீட்டருக்கு சாம்பல் நிரம்பியுள்ளதுடன் 4 கிலோமீட்டர் தூரம் வரை பாறைகள் வெடித்துச் சிதறியதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதுடன் நேற்று (04) காலை முதல் எரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தோனேசியாவில் எரிமலை வெடுப்பு காரணமாக பசுபிக் நெருப்பு வலயத்தில் அமைந்துள்ள டெக்டோனிக் தகடுகள் அடிக்கடி ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் அதிகளவில் நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியாக காணப்படுகின்றது.
அதன்படி, ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளில் சுனாமி பாதிப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.