கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல் : மோடி கடும் கண்டனம்
கனடாவிலுள்ள (Canada) இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை அவர் நேற்று (04) தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் டொரன்டோ (Toronto) மாகாணத்துக்கு அருகே ஒன்றாரியோ (Ontario) மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் (Brampton) நகரில் இந்து சபா கோவிலொன்று உள்ளது.
கோவில் மீது தாக்குதல்
இந்த கோவிலில் தூதரக முகாம் ஒன்று அமைந்துள்ள நிலையில் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதனை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கனடாவில் தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகளின் வருகையை கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோவிலில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீது அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதுடன் அங்கிருந்த இந்து மக்களை விரட்டியடித்துள்ளனர்.
பிரதமர் கண்டனம்
இந்தநிலையில், குறித்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் மேலும் தெரிவிக்கையில், “கனடாவில் இந்து கோவில் மீது நடந்த திட்டமிட்ட தாக்குதலுக்கு நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன்.
நம்முடைய தூதர்களை அச்சுறுத்துவதற்கான கோழைத்தன முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு உள்ளனர் இதுபோன்ற வன்முறை செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தி விட முடியாது.
கனடா நாட்டு அரசு, நீதியை உறுதிப்படுத்தி சட்ட விதியை நிலைநாட்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.