தொடருந்து விபத்தில் பலியான இளம் யுவதி: உறவினர் வெளியிட்ட தகவல்
காலி, மினுவாங்கொட பிரதேசத்தில் தொடருந்தில் மோதுண்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
காலி, மடபதல, இரண்டாவது வீதியில் வசித்து வந்த பாக்யா சுபாஷினி ரத்நாயக்க என்ற 23 வயதுடைய யுவதியே நேற்று உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனை காலி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவில் மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகேவினால் நடத்தப்பட்டுள்ளது.
மரண விசாரணை
இந்த விபத்தில் அடிவயிறு மற்றும் கால்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட மரண விசாரணையில் யுவதியின் மரணம் குறித்து அவரது அத்தை மஹதுர தில ஜயசேகர (62) பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
யுவதியின் தாய் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தந்தை குடும்பத்தை விட்டுப்பிரிந்திருந்தார். தகப்பனில்லாத இரண்டு குழந்தைகளையும் என் சொந்தப் பிள்ளைகள் போல தத்தெடுத்தேன்.
தொடருந்து சாரதி வெளியிட்ட தகவல்
ஆடையகமொன்றில் பணி புரிந்து வந்த நிலையில், தினமும் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு நடந்து செல்வார். மினுவாங்கொடை சந்தி வரை தொடருந்து பாதையில் நடந்து செல்வார்.
கடந்த (01) திகதி காலை எட்டு மணியளவில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். இதன்போது பாதையை கடக்க முயற்சித்த போது தொலைபேசியை பார்த்துக்கொண்டிருந்ததாக தொடருந்து சாரதி தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வயிற்றில் காயங்கள் இருந்தன. அவள் மிகவும் வேதனைப்பட்டு என்னிடம் பேசினாள். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இயந்திரங்கள் சத்தமாக ஒலித்தன. இன்று காலை குழந்தைக்கு போதி பூஜை செய்ய கோவிலுக்கு சென்றபோது, அவள் இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.