அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டால் அதிக விலைக்கு நாட்டு அரிசி சந்தைக்கு வெளியிடப்படும் என தேசிய விவசாய ஒற்றுமை அமைப்பின் தவிசாளர் அனுராதா தென்னகோன் எச்சரித்துள்ளார்.
அத்தோடு, ஒரு சில பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் செயற்பாடுகளினால் சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று (04) தெரிவித்துள்ளார்.
போலி அரிசி தட்டுப்பாடு
கடந்த சிறு மற்றும் பெருபோக இரண்டு வருடங்களில் 70 வீதத்திற்கு மேல் நெல் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், பாரிய ஆலை உரிமையாளர்கள் அவற்றை 80 ரூபா தொடக்கம் 90 ரூபா வரையான விலைக்கு விவசாயிகளிடமிருந்து பெற்று சேமித்து வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீரி சம்பா மாத்திரமே அதிகளவு விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிடும் சிலர், நாட்டு அரிசியை சந்தைக்கு விடாமல் கீரி சம்பாவை விற்பனை செய்வதற்காக போலியாாக நாட்டு அரிசி தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அனுராதா தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விலை அதிகரிப்பு
இதேவேளை, தனக்குத் தெரிந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரிடம் 18 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அரிசி கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டால், அதிக விலைக்கு நாட்டு அரிசி சந்தையில் வெளியாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், ஒவ்வொரு முறை அரசாங்கமொன்று பதவியேற்கும் போதும் அரிசி ஆலை உரிமையாளர்கள் இவ்வாறான பற்றாக்குறையை ஏற்படுத்தி கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.