காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 20 பேர் பரிதாபமாக பலி
வடக்கு காசாவில் (Gaza) பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் உள்ள ஒரு வீடு மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் (Israel) இராணுவம் மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் இடையே நடந்து வரும் போர் ஓராண்டைக் கடந்துள்ளது.
இந்தப் போரில் இதுவரை சுமார் 43,000 பேர் பலியாகியுள்ள நிலையில் மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.
போர் நிறுத்தம்
இந்தநிலையில், ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறி வரும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, கடந்த சில வாரமாக வடக்கு காசாவில் இஸ்ரேல் இராணுவம் வான்வழியாகவும் மற்றும் தரைவழியாகவும் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்தநிலையில், வடக்கு காசாவில் பெய்ட் லாஹியா நகரில் உள்ள ஒரு வீடு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் எட்டு பெண்கள், ஆறு குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்ததாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.