;
Athirady Tamil News

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டிரம்பா …கமலாவா ? பிரபல நீர்யானையின் கணிப்பு வைரல்!

0

தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று, செவ்வாய்க்கிழமை (05) நடைபெறுகிறது.

ஹிப்போ ஜோசியம்

அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தாய்லாந்தின் நீர் யானையின் கணிப்பு சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

‘ஹிப்போ’ – மூ டெங் (Moo Deng) என்ற பெயரிடப்பட்ட அந்த நீர்யானையின் முன் பூங்கா பராமரிப்பாளர்கள் இரண்டு தர்பூசணிப் பழங்களை வைத்தனர். ஒன்றில் ட்ரம்ப் பெயரும், மற்றொன்றில் கமலா ஹாரிஸ் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த குட்டி நீர்யானை நேராக ட்ரம்ப் பெயர் பொறித்திருந்த தர்பூசணியை நோக்கிச் சென்று அதை புசித்தது. அருகிலிருந்த மற்றொரு பெரிய நீர் யானை கமலா ஹாரிஸ் பெயர் இருந்த தர்பூசணிப் பழத்தை உண்டது.

இதன் மூலம் மூ டெங், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் எனக் கணித்ததாகக் கூறப்பட்டது.

இணையத்தில் வைரல்
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், அணி மாறும் மாகாணங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ட்ரம்ப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ‘ஹிப்போ ஜோசியம்’ வீடியோ கவனம் பெற்றுள்ளது.

அதேவேளை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்படும்.

இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும். எனினும் ஜனவரி 6ஆம் திகதியே அமெரிக்க ஜனாதிபதி யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். ஜனவரி 20 ஆம் அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழா நடைபெறும்.

2010 இல் பலித்த ஆரூடம்
அதேவேளை 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜெயிப்பது யார்? என்பதை கணித்து ஆரூடம் கூறியது. அது கணித்தது அப்படியே நடந்தது. இந்த கணிப்பு உலக முழுவதும் பிரபலமாக பேசப்பட்டது.

இந்நிலையில் மூ டெங் என்ற குட்டி நீர் யானை தீர்க்கதரிசியாக மாறுமா? என்பது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் தெரியவரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.