இந்தியாவில் நடக்க உள்ள முக்கிய ஆன்மீக நிகழ்வு – முதல் முறையாக கொள்கையை மாற்றிய Google
கும்பமேளா நிகழ்விற்காக கூகிள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கும்ப மேளா
கும்பமேளா திருவிழா இந்துக்களால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஆற்றுப்படுகையில் கொண்டாடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரம்மாண்டமான கும்பமேளா விழா நடைபெற உள்ளது. திரிவேணி சங்கமம் என்பது கங்கை, யமுனை ஆறுகளும் கண்ணுக்குப் புலப்படாத சரஸ்வதி ஆறும் கூடும் இடமாகும்.
கூகுள் ஒப்பந்தம்
இதற்கு முன்பு நடந்த கும்பமேளா நிகழ்விற்கு 24 கோடி பக்தர்கள் வந்திருந்தாக தெரிவித்துள்ள உத்தர பிரதேச அரசு, 2025 கும்ப மேளாவில் 40 கோடி மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறது. விழாவை சிறப்பாக நடத்த ரூ.6,800 கோடியை ஒதுக்கி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கும்ப மேளா நிர்வாகம் கூகிள் நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி பிரத்தியேக வழிசெலுத்தல் அமைப்பை(Google Map Navigation) உருவாக்க கூகிள் முன்வந்துள்ளது. இதில், இங்குள்ள முக்கிய சாலைகள், மதத் தலங்கள், கட்டங்கள், அகதாக்கள் மற்றும் முக்கிய சாதுக்களின் இடங்கள் பற்றிய தகவல்களை வழங்கும்.
1000 சிறப்பு ரயில்
இது குறித்து பேசிய கும்ப மேளா நிகழ்வின் கூடுதல் மேலாளர் விவேக் சதுர்வேதி, “உலகம் முழுவதும் மக்கள் அதிக அளவில் கூடும் போது, தற்காலிக நிகழ்வுகளுக்கு Google வழிசெலுத்தலை இதுவரை அனுமதித்ததில்லை.
இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் அது ஈர்க்கும் பெருந்திரளான கூட்டத்தையும் உணர்ந்து, கும்பமேளா பகுதியை அதன் வழிசெலுத்தல் வரைபடத்தில் சேர்ப்பதற்கு நிறுவனம் தனது கொள்கையைத் திருத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்படி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிகழ்விற்காக 1000 க்கு மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.