விரைவில் வாகன இறக்குமதி – அரசு அறிவிப்பு
வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (6.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Harath) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மத்திய வங்கி (Central Bank) மற்றும் நிதி அமைச்சு என்பன உள்ளன.
வாகன இறக்குமதி
அந்தவகையில், மூன்று கட்டங்களாக வாகன இறக்குமதியை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்களுடன் இதுதொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அரசாங்கம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துமாக இருந்தால் அதனைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் தீர்மானத்தை அரசாங்கமும், நிதித்துறை அதிகாரிகளுமே மேற்கொள்ள வேண்டும். இதற்கான பரிந்துரைகள் மத்திய வங்கியினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.