குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அராங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இதனைக் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவுகள்
அத்துடன், நியாயமான காரணங்களின்றி அந்த குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளது.
மேலும், இது தொடர்பில் ஆராய்வதற்காக சமூக சேவைகள் அமைச்சினால் ஏற்கனவே விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினால், அஸ்வெசும கொடுப்பனவுகள் யாருக்கு கிடைத்துள்ளது, உரிய நபர்களுக்கோ அல்லது குடும்பங்களுக்கோ அந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பிரதேச செயலகங்களிலிருந்து தகவல் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடு
இதேவேளை, சீன அரசாங்கத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சுமார் 2000 வீடுகளை நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுவையில் 575 வீடுகளும், கொட்டாவவில் 108 வீடுகளும் “சீனா தொடருந்து 25வது பணியகக் குழுமம்”(M/S China Railway 25th Bureau Group Co. Ltd) நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ளன.
மேலும், தெமட்டகொடையில் 586 வீடுகள் மற்றும் மஹரகமவில் 112 வீடுகள் “எம்.எஸ் சீன ஹார்பர் இன்ஜினியரிங்” (M/S China Harbour Engineering Company Ltd) நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேலியகொடையில் 615 வீடுகளை “ஷாங்க்சி கன்ஸ்ட்ரக்ஷன் இன்வெஸ்ட்மென்ட்” (M/S Shanxi Construction Investment Group Co. Ltd) நிறுவனம் நிர்மாணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.