ட்ரம்பின் இரண்டாம் வருகை… கொத்தாக வெளியேற்றப்படவிருக்கும் புலம்பெயர் மக்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அச்சத்திலும் விரக்தியிலும் உள்ளனர்.
தடாலடி நடவடிக்கை
ஏற்கனவே உறுதி அளித்துள்ளது போன்று நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாகவே ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் பெருந்திரளான நாடுகடத்தலை எவ்வாறு திட்டமிடப்போகிறார் என்பது பற்றி அவர் இதுவரை குறிப்பிடவில்லை.
ட்ரம்பின் இந்த தடாலடி நடவடிக்கையை நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளதுடன், மிகவும் சிக்கலானதாகவும் செலவு மிகுந்ததாகவும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் பகுதியில் வசிக்கும் 22 வயதான Angel Palazuelos ட்ரம்பின் வாக்குறுதியும், முதன்மையான திட்டங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ள தகவல் அறிந்து தூக்கத்தை தொலைத்துள்ளார்.
பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி மாணவரான அவர், தகவல் அறிந்த பின்னர் பயத்துடனே நாட்களை நகர்த்துவதாக தெரிவித்துள்ளார். மெக்சிகோவில் பிறந்த அவர், நான்கு வயதில் இருந்தே அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
குழந்தை பருவத்தில் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டு, குடியுரிமை பெறுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படாத ஆயிரக்கணக்கானோரில் இவரும் ஒருவர். ட்ரம்ப் முன்னெடுத்த அனைத்து தேர்தல் பரப்புரையிலும் சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்த வேண்டும் என்றே குறிப்பிட்டு வந்ததை Palazuelos நினைவுகூர்ந்துள்ளார்.
ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்திலும் பெருந்திரள் நாடுகடத்தலுக்கு தயாரானார். ஆனால் அவரது ஆணை அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், பெரும்பாலும் நடைமுறை அடிப்படையில் கைவிடப்பட்டது.
இராணுவத்தைப் பயன்படுத்துவதில்
தற்போது தமது முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகவே ட்ரம்ப் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ஆண்டுக்கு 1 மில்லியன் பேர்கள் என பத்தாண்டுகளுக்கு புலம்பெயர் மக்களை நாடுகடத்த 967.9 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடுகடத்தும் விவகாரம் கட்டுப்பாட்டை மீறுவதாக நான் நினைத்தால், இராணுவத்தைப் பயன்படுத்துவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் ட்ரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பியூ ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் குறைந்தது 11 மில்லியன் ஆவணமற்ற மக்கள் வாழ்கின்றனர். மட்டுமின்றி, 2022 நிலவரப்படி, அமெரிக்காவில் பிறந்த 18 வயதுக்குட்பட்ட சுமார் 4.4 மில்லியன் பிள்ளைகள் சட்டவிரோதமாக குடியேறிய பெற்றோருடன் வாழ்கின்றனர்.
இவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்றே அஞ்சப்படுகிறது.