வீரர்களுக்கு நன்றி செலுத்தவே ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டம்
புது தில்லி: ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு “ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை அமல்படுத்துவது இந்த நாடு தனது கதாநாயகர்களுக்கு நன்றி செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு “ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி இதே நாளில் (நவ. 7) இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டம் கடந்த பத்து ஆண்டுகளில் உங்களை எல்லாம் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கும். இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க திட்டத்தால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களும் அவர்களது குடும்பத்தினரும் பயனடைந்தனர். எண்ணிக்கைக்கு அப்பால், நமது முப்படைகளின் நலன் மீது அரசு உறுதிபூண்டிருப்பதை இத்திட்டம் காட்டுகிறது. நமது முப்படைகளையும் வலுப்படுத்த எனது அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவது இந்த நாடு தனது கதாநாயகர்களுக்கு நன்றி செலுத்துவதை உறுதிப்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் நீண்ட காலமாக எழுப்பப்பட்ட வந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.