கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
வெளிநாட்டு மாணவர்களுக்காக கனடாவில் நடைமுறையில் இருந்த ‘ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS)’ மற்றும் NSE திட்டங்களை கைவிடுவதாக கனடா (Canada) அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களுக்கான படிப்பு அனுமதி விண்ணப்பங்களை சரிபார்க்கும் செயல்முறையை நியாயமாகவும், சமமாகவும் வைத்திருக்க கனடா உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளது.
கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்
வருங்காலத்தில் கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்களை நேரடியாக தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான கல்வி அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்படி கனடா அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீட்டு ஆவணங்களை, மாணவர்களின் தற்போதைய நிதி நிலையை அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாக வழங்க வேண்டும் என்றும் கனடா அறிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளில் இருந்து கனடாவில் படிக்க மாணவர்களை தொடர்ந்து வரவேற்போம் என்றும் கனடா கூறியுள்ளது.
விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை
SDS என்ற திட்டம் 2018-ஆம் ஆண்டு, கல்லூரி படிப்பை மேற்கொள்ள கனடாவில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிரேசில், ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ், கொலம்பியா, கோஸ்டாரிகா, மொராக்கோ, பெரு, பிலிப்பைன்ஸ், செனேகல், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் வியட்நாம் ஆகிய நாட்டு மாணவர்களுக்காக SDS திட்டம் உருவாக்கப்பட்டது.
SDS அல்லது NSE திட்டங்களுக்கு தகுதியானவர்களா இல்லையா என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அனைத்து மாணவர்களும், கனடாவில் படிக்க வழங்கப்படும் விண்ணப்பங்களில் உள்ள தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்று கனேடிய அரசு கூறியுள்ளது.