மொத்தமாக மூழ்கடித்த பெருவெள்ளம்… வலென்சியாவில் வெடித்த போராட்டம்
ஸ்பெயினின் வலென்சியாவில் மழை மற்றும் பெருவெள்ளத்தை முறையாக எதிர்கொள்ள தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இரத்தத்தால் கறைபட்டுள்ளீர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிராந்திய தலைவர் Carlos Mazón ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். சனிக்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், நாங்கள் சேற்றில் படிந்துள்ளோம், நீங்கள் இரத்தத்தால் கறைபட்டுள்ளீர்கள் என மக்கள் முழக்கமிட்டுள்ளனர்.
அக்டோபரில் வலென்சியா மற்றும் அண்டை மாகாணங்களில் பெய்த பேய் மழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 200 கடந்துள்ளது. 80 பேர்கள் இன்னமும் மாயமாகியுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கையை மிகவும் தாமதமாக வெளியிட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோபமடைந்த போராட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் மட்டுமின்றே நகரமே பெருவெள்ளத்தால் சேதமடைந்துள்ளது என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவிக்கையில், பலரைப் பாதித்த இந்தப் பேரிடருக்கு காரணமான இந்த மோசமான நிர்வாகத்தின் மீது எங்களது கோபத்தையும் ஆத்திரத்தையும் காட்ட விரும்புகிறோம் என்றார்.
எச்சரிக்கை கிடைக்கவில்லை
கடந்த வாரம் ஸ்பெயினின் மன்னரும் ராணியாரும் பைபோர்டா நகரத்திற்குச் சென்றபோது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் சேறு மற்றும் பிற பொருட்களால் தாக்கினர். பைபோர்டா நகரமானது பெருவெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
பிரதமர் பெட்ரோ சான்செஸ் மீதும் பொருட்கள் வீசப்பட்டன. அவர் உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் மற்றும் பல பகுதிகளில் தெருக்கள் இன்னும் சேறு மற்றும் குப்பைகளால் மூடப்பட்டிருக்கின்றன.
இதனிடையே, தனது செயல்களை நியாயப்படுத்திய கார்லோஸ் மசோன், தனது அதிகாரிகளுக்கு மத்திய அரசிடமிருந்து போதிய எச்சரிக்கை கிடைக்கவில்லை என்றும், பேரிடரின் அளவு எதிர்பாராதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.